அடர்ந்த காட்டில் நடைபெற்ற மணம்...

தாலி கட்டினா அது திருமணம்னா எனக்கும் கல்யாணம் ஆயிட்டுங்க போங்க.. இதோ என் திருமணக் காதை..

அழகான ஒரு காலை, சாரல் தூரும் இனிய மழைக்காலம், நனைந்த சாலையில் அம்மாவுடன் கைக்கோர்த்து நடந்தேன், சிறுபிள்ளையாக மாறிவிட்டதாய் குதூகலம், பேருந்துப் பயணத்தில் அம்மாவை வயிரு வலிக்கச் சிரிக்க செய்து கொண்டே, அப்பாவைத் திரும்பி பார்த்தால், அவர் தியானம் செய்கிறேன் என்ற போர்வையில் தூங்கிக்கொண்டு வந்தார்..

பேருந்து நிலையத்தில் இறங்கிய உடன் எங்கு போக வேண்டுமோ அந்த ஊரை இருவரும் மறந்து தொலைத்துவிட்டு இருந்தார்கள்..எனக்கு குதூகலம் தாங்க முடியவில்லை. பின்னர் அம்மா எப்படியோ "திருவனங்ஞீலி"(வனத்திலுள்ள ஞீலிங்கேஸ்வரர்)என்று கண்டுபிடித்தார்கள்.

"எங்கேர்ந்து தான் பிடிச்சிங்களோ இந்த ஊர, ஒருத்தன விலை கொடுத்து வாங்க இந்த வேலையெல்லாம் வேற" என்று கிண்டல் செய்தேன், அம்மா திட்டுவாங்கனு பார்த்தா சிரிக்கிறார்கள். அப்பா முறைக்க, பேருந்தை தேடிப்பிடித்து உட்கார்ந்தோம்.

திரும்பவும் நான் சும்மா எல்லோரையும் கிண்டல் செய்து அம்மாவை சிரிக்கப் பண்ணிக் கொண்டு வந்தேன். பேருந்தில் சிலரே இருந்தார்கள் நடத்துனரும் கூட சந்தோசமாகத் தான் இருந்தார்.. அந்த பேருந்தில் ஒரு பையன் (அழகான) உட்கார்ந்து கொண்டு வந்தான், என் அப்பா அவனுக்கு பின்னால் உட்கார்ந்திருந்தார்.. அம்மா, அப்பா என்ன செய்கிறார் பார் என்று சொன்ன போது(மட்டும்) திரும்பி பார்த்துக் கொண்டே வந்தேன்.. நான் அவனை தான் பார்க்கிறேன் என்று அவனுக்கு சந்தோசம்.. கடைசியில் அப்பாவுடன் பேசிய போது அவன் வழிந்த அசடு இருக்கின்றதே.. என்ன ஒரு காமெடி...

அந்த சாலை காட்டின் நடுவே போனது, வழியில் அவ்வப்போது சிறு, சிறு கிராமங்கள், வீடுகளைத் தேடிய போது தூரத்தில் அம்மா காட்டினார்கள்... வளைவுகளில் ஓட்டுனர் சப்த்தமெலுப்பினாலும் சில வண்டிகள் இடிக்கும் அளவு வந்தன. இந்த சாலையில் போகும் ஒரே பேருந்து இதுதானோ(!)..

"இதெல்லாம் வியாபரம்மா, பாரு இந்த கோயிலுக்கு எவனாவது போவானா அதுவும் திருச்சிய மாதிரி 1008 கோயில்களை நகரத்திலேயெ வைத்துக்கொண்டு? அதான், இந்த மாதிரி பரிகாரம், தொசம் கழிக்கறேன் பேர்வழினு ஏமாத்தினா நீ என்னையும் இழுத்துட்டு வந்துட்ட இல்ல..."அம்மாவிடம் கத்தினேன்.ஆனால் அந்த நாளின் குளுமையும், அம்மாவின் அருகாமையும் என்னை மகிழ்வித்ததே உண்மை..

கோயிலையடைந்தோம்.. பழமையான கோவில், பெரும்பாலும் தம்பதிகளையே பார்க்க முடிந்தது(புதிதாக திருமணமான).. கோயிலில் நுழைந்த உடன் ஒருவர் எங்களை அணுகி, தான் உதவுவதாகவும் குறைந்த பட்சம் 100 ரூபாய் என்றும் சொன்னார்.. (நமக்காய் பரிகாரம் செய்யத் தெரியாதாம்...)இவர்களும் சரியென்றனர்.. அப்போது சுழல ஆரம்பித்தவர் தான் என் தோசத்தை கழித்து விட்டுத் தான் அடுத்த வேலை பார்த்தார்...

முதலில் பார்த்தது எமதர்ம ராஜன், (ஏன்.....!).. பிறகு விநாயகர் (புதிதாக இல்லை...)..! ஒவ்வொரு இடத்திலும் சூடம் கொழுத்தி, விழுந்து கும்பிட்டு... அப்பப்பா... இதில் குரங்கு வேறு என் கையிலிருக்கும் பழங்களுக்காக... சாமி என்று எவரிடமோ தருவதற்கு, அதனிடமாவது தந்திருக்கலாம்... அதில் அவர்களின் அய்டியாக்களைப் பார்க்கணுமே.. ஒரே அய்யர் தான் எல்லா கோயிலுக்கும்... இவர்(உதவி.. செய்வதாகக் கூறியவர்) விளக்கு ஏற்றும் போது நேரம் ஆகாமலிருக்க திரியின் அடியில் சூடத்தை வைத்து அதை ஏற்ற சொல்கிறார்..(என்ன வேகம்..), இவருக்கு நிகராக அய்யர், எல்லா கோயில்களில் உள்ள மக்களிடமும் தட்சனைப் பெற நேரத்தைப் பக்காவாக உபயோகிக்கிறார்...(மல்டி புராசசிங் தான் போங்க)

பிறகு ஒரு இடத்தில் ஒரு அய்யர் தோசம் கழிக்கப் போவதாகச் சொல்லி என்னென்னவோ செய்தார்(ஒரு நிமிடம்..) மந்திரத்தைச் சொன்னார்(2 நிமிடம்.)... 3 நிமிடம் கூட சொல்லாத மந்திரத்திற்கு 30 ரூபா...! பிறகு தான் கூத்தே.. ஒரு தாலியைக் கொடுத்து வாழை மரத்துக்குக் கட்ட சொல்லிட்டாங்க... எனக்கு கோபம் வருவதைப்பார்த்து அம்மா இது தான் கடைசி என்று தேற்றினார்கள்.. கோபம்னா, கோபம் எனக்கு...முறைத்துக் கொண்டே கட்டினேன், அம்மா சிரித்துக் கொண்டே இருந்தார்கள்...

பிறகு ஒரு குட்டி மாலையைக் கொடுத்து அதை வீட்டுக்கு முன் கட்டணுமாம், அப்படிக் கட்டினால் எல்லோரும் என்ன, என்னனு கெட்பார்கள் கண் திருச்டி போய்டும்னார்...( அம்மா அது போலவே செய்ய யாரும் என்னனு கேட்கவில்லை என்பதும் காமெடி...).. பிறகு கொஞ்சம் குங்குமத்தைக் கொடுத்து இது தீர்வதற்குள் எனக்கு மாப்பிள்ளை கிடைக்குமென்றார்..(இந்தியனின் காப்பியா, இதின் காப்பி தான் அதுவா..?) நான் அதை உபயோகிப்பதில்லை என்பதைக் கூறவும் வேண்டாம்...

பிறகு ஒரு சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கி காக்காய்க்கு வைக்கச் சொன்னார், நான் அந்த இடம் போகும் முன்பே எல்லா காக்கைகளும் அங்கு ஆஜர்... உங்க குலதெய்வம் பெண்ணாக இருந்தால் போகும் முன்னே காக்காய்கள் வரும் என்று ஒரு பெரிசு கூறியது( இது அந்த காக்காய்க்கு தெரியுமா...?) அதுமட்டும் போதாதாம்.. என் வயது அளவு சாப்பாட்டு பொட்டலங்கள் வாங்கி அதை தானம் செய்ய வேண்டுமென்றார்.. கொடுக்கப் போகும் போது, பிச்சைக்காரர்களுக்குள் அத்தனை சண்டை.. கெட்ட வார்த்தைகளிலெல்லாம் திட்டிக் கொண்டனர்.. கொடுக்கும் போது கடுப்படிக்கக் கூடாது என்று முகத்தில் புன்சிரிப்பை கட்டாயப்படுத்தி வரவழைத்தேன்...

பிறகு ரொம்ப நேரம் காத்திருந்து பேருந்திலேரி வந்தோம்... இது எந்த வகையிலும் எனக்குப் பயன் தராது என்று தெரியும், அம்மா, அப்பாவிற்கு சிறிது ஈடுபாட்டைத்தரும் என்பதை தவிர. அப்பா, தாத்தா ரொம்ப பழைய காலத்து ஆட்கள், அவர்களுக்காக ஒப்புக் கொண்டேன்.. (என் எந்த வகையான நியாப்படுத்துதலும் அவர்களின் நம்பிக்கையை தகர்க்காது)ஆனால் அம்மா அப்பாவுடன் சென்று வந்தது மனதுக்கு சந்தோசமாகவும், வித்யாசமான அனுபவமாகவும் (பிளாக் எழுத உபயோகமாகவும்) இருந்தது...

கடைசியாக "என்ன போ, என்னை எமாத்தி, வாழாவெட்டியாக்கிட்டியேமா... அந்த வாழ மரத்தையும் தூக்கி கொண்டு வந்து தோட்டத்தில் நட்டிருக்கலாம்" என்று நான் சொன்ன போது அம்மா நீண்ட நேரம் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. அதற்காக என்ன பைத்தியக்காரத்தனங்கள் வேண்டுமானாலும் செய்யலாம்...

4 பின்னூட்டங்கள்:

said...

அன்புத்தோழிக்கு,

நல்ல சுவாரஸ்யமான பதிவு…… சில முடநம்பிக்கைகளால், நமது முன்னோருக்கு மனநின்மதி கிடைப்பதை கண்டிருக்கின்றேன், அவர்களிடம் அவை குறித்து பெரிதாக விவாதிக்க தேவையில்லை…..

‘என்னை பொறியியல் துறையில் பெரியாளாக வருவானென்று ஒரு சோதிடர்(ஜோதிடர்) அம்மாவிடம் சொன்னார். நான் அப்போது உயர்தரத்தில் (இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்புக்கு சமனானது) உயிரியல் பயின்றுகொண்டிருந்தேன்… எனக்கு சிரிப்புத்தான் வந்தது.’ அதைவிட கொடுமை என்னவென்றால், எனக்கு பல் வைத்தியத்துறைக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபோதும், அதை கைவிட்டு இலத்திரணியல் ஊடத்துறையை தேர்தெடுத்ததுதான்……. ஆனால் அம்மா இப்போதும் சந்தோஷமாகவே இருக்கின்றார்…. அவர் இப்போதும் சோதிடத்தில் நம்பிக்கை வைத்துள்ளார்……

said...

// நான் அதை உபயோகிப்பதில்லை என்பதைக் கூறவும் வேண்டாம்...//

அப்போ இன்னும் மாப்பிள்ளை கிடைக்கலை!!!!!


வாழைமரம் உங்களுக்குத் தாலி கட்டலையா? :-))))

said...

நன்றி மருதமூரான்...

நீங்கள் கூறுவது சரி தான்...

//வாழைமரம் உங்களுக்குத் தாலி கட்டலையா? :-)))) //
யார், யாருக்கு கட்டினா என்ன.. எல்லாம் பைத்தியக்காரத்தனம் தான்...

//அப்போ இன்னும் மாப்பிள்ளை கிடைக்கலை!!!!!//

யாரும் மாட்டலை...

said...

மூடநம்பிக்கை என்று சொல்லும் இந்த பழக்கத்தை செய்ததால் அம்மா அப்பா மனநிம்மதி பெற்றார்கள் என்று சொல்லி இருக்கிறீர்களே! உண்மைதான் அவர்களுக்கு ஒர் நம்பிக்கையை குடுக்க எதாவது ஒன்று தேவை...நடக்கும் என்ற நம்பிக்கை கிடைத்ததும் அவர்களை சுற்றியும் ஒரு பாசிட்டிவ் அலைகள் நிரம்பி இருக்கும்
அந்த அலைக்குள் வருகிற ஒரு குடும்பம் அந்த பாசிட்டிவ் திங்கிங்க் ல் மாட்டிக்குவாங்க பாருங்க ... :) ஆல் தெ பெஸ்ட்.