"விநாயகர் சதுர்த்தியில் நடைபெற்ற குறு மேடை விழாவில் அத்தனை அழகாக பரத நாட்டியம் ஆடிய குழந்தையின் மீதான அனைவரின் ஈர்ப்பு","புதிதாக வண்டி வாங்கின பின் அதை பூசை செய்யாமல் ஏன் இருக்கின்றாய்? என்ற என் வீட்டு சொந்தக்காரரின் கேள்வி", "சடங்குகள் இல்லாத திருமணத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்ல, அது பிற்போக்கான மனப்பாடே என்றாலும்! என்ற ஒரு பதிவரின் பின்னூட்டம்" எல்லாவற்றிற்கும் மேலாக, "என் திருப்திக்காக இந்த சடங்குகளைச் செய்கின்றேன், கடவுள் நம்பிக்கையெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே தீபாவளி கொண்டாடிய என் அம்மா" என்ற எல்லாமே எனக்கு ஏற்படுத்தியது தான் இந்த எண்ணம் புனிதம், கலை மற்றும் பண்பாடு தெய்வத்தை அல்லது தெய்வ நம்பிக்கையை மட்டுமே சார்ந்த ஒன்றா?
கலையில் பெரும் புகழை அடந்த சிலர் கண்மூடித்தனமாக தெய்வ நம்பிக்கை வைத்துள்ளதும் என்னை யோசிக்க வைக்கும், நம் தமிழகத்தில் இளையராஜா, ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரகுமான் இவர்கள் உதாரணங்கள். படித்து, பயின்று, பழகி துன்பப்பட்டு வரும் சில விசயங்கள் உதாரணமாக தமிழ் இலக்கியம், கணக்கு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் இருப்பவர்கள் பெரும்பாலும் தெய்வ நம்பிக்கை இல்லாதிருக்கின்றார்கள். அது போல் வட்டிக்கு விடுபவர்கள், நகை வியாபாரிகள் மற்றும் தன்னை, உழைப்பை மாத்திரம் நம்பி வாழாதவர்கள் பெரும்பாலும் தெய்வ நம்பிக்கை அதிகம் வைத்துள்ளார்கள். அதே சமயம் உழைப்பாளிகள் தன் உழைப்பில் வாழ்பவர்கள் கடவுளை அத்தனை பெரிதாக பெரும்பாலும் நம்புவதில்லை அல்லது எடுத்துக்கொள்வதில்லை.
கலையிலும் படித்து, பயின்று, பழகி எல்லாம் உண்டு என்றாலும் இவற்றால் மட்டுமே அல்லாமல் அதையும் மீறிய ஒன்று அவர்களை இயக்குகின்றது என்று நம்புகின்றார்கள், படித்த அறிவாளிகளும் கடவுள் என்ற ஒன்றை நியாயப்படுத்த இயலாவிட்டாலும் சில முறை கடவுளை ஆதரிப்பதும் நடக்கின்ற ஒன்று தான்(சுஜாதா), அவர்களுக்கு இரட்டை மனப்பாடு என்பதால் அவர்களால் இல்லை என்றும் மறுக்க முடியாது, என்றாலும் பொதுவாக அறிவாளிகள் என்று காட்டிக்கொள்பவர்கள் கடவுளை அத்தனை நம்பாதவர்களாக இருக்கின்றனர்.
மேலும், வீட்டிலேயே இருக்கும் பெண்கள் தெய்வத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் செய்வதையும், அவர்களுக்கு அதானால் மாத்திரமே மதிப்பு இருப்பதையும் பார்த்துள்ளேன், ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள் தெய்வ நம்பிக்கை பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை, சடங்குகள் செய்ய நேரம் இல்லாததால் அவை தற்காலிகமாக நின்று, பின்னால் நிரந்தரமாக. ஆனாலும் அவர்களின் மதிப்பு குறைந்து போவதில்லை, என்றாலும் பொதுவாகவே பெண்களின் புனிதம் தெய்வத்தை சார்ந்த ஒரு விசயமாகவே காணப்படுகின்றது. நம்பாவிட்டாலும் கூட சடங்குகளின் கால்களைப்பிடித்துக்கொண்டு தொங்குகின்றது.
ஒரு பெண்ணின்/ஆணின் நடவடிக்கைகளில் இல்லாத ஒரு புனித்தத்தை சில சடங்குகளோ, தெய்வ நம்பிக்கையோ கொடுக்க முடிகின்றது என்ற ஒன்று தான் இவர்களை இயக்குகின்றது. அல்லது இவை மூலமாகத் தான் அவர்களின் புனிதத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று பரைசாற்றுகின்றது, நம்பவும் வைக்கின்றது. எந்த ஒரு புனிதமும் தெய்வ பிம்பத்தைக் கொண்டுள்ளது, நான் காலையில் உடல் பயிற்சி செய்வேன், படிக்கும் முன் இரு நிமிடம் மௌனமாக இருப்பேன், ஆனால் காலையில் கோயில் செல்லும் பெண்களுக்கும், கடவுள் வாழ்த்து பாடும் பென்களுக்குமுள்ள ஒரு புனிதபிம்பம் என்னிடமில்லை. கிருஷ்ணா, கிருஷ்ணானு புல்லாங்குழல் கற்றுக்கொண்டு பாடும் போது எனக்கு கிடைக்கும் ஒன்று, அழகான சினிமா பாடல் இசைக்கும் போது கிடைப்பதில்லை பிறரிடமிருந்தும், என்னிடமேயும் கூட.
கலைகளை எடுத்துக்கொண்டால் சிலைகளில் தெய்வ வடிவங்கள், பாடல்களில் தெய்வ பாசுரங்கள் இவை தான் பெரு மதிப்பை ஒரு புனித பிம்பத்தை பறைசாற்றுகின்றது. இவையில்லாத கலைகள் ஒரு செயற்கையை, புனிதமின்மையை தோற்றுவிக்கின்றது. கோயில்களிலுள்ள பல அழகான சிலைகளைக் காணும்போதெல்லாம் ஒரு கேள்வி வரும், தெய்வமில்லை என்று அந்த காலத்தில் அவர்கள் நினைத்திருந்தால் இப்படிப்பட்ட கலைகள் உருவாகியிருக்குமாவென்று. தாஜ்மகால் போல் சில உருவாகியிருக்கலாம் என்று எண்ணினாலும், இப்படி பல இடங்களில், பல வகைகளில், அத்தனை நுணுக்கமாக, கலைத்திறனுடன் இருந்திருக்குமா, போட்டிபோட்டுக்கொண்டு கட்டியிருப்பார்களா? பரதநாட்டியத்தில் இருக்கும் மதிப்பு டிஸ்கோவில் இல்லாதது போல், பல உதாரணங்கள் கூறலாம்.
பண்பாடு என்பது தெய்வத்தை சார்ந்த ஒன்றாக அவ்வளவாக இருப்பதில்லை, என்றாலும் இது reverse engineering(சரியான தமிழ் வார்த்தை வேண்டும்) கடவுள் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு பண்பாட்டுடன் இருப்பதாகக் காட்டிக் கொண்டுவிடலாம். கலை, இலக்கியம்,புனிதம் இவையெல்லாம் இல்லாமல் போணாலும் தெய்வம் என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு பண்பாட்டை நிலை நாட்டிவிட இந்த உலகில் முடிவது பெரிய ஆச்சரியமான ஒன்று. மனிதத்தன்மையில்லாத சிலர் கூட தெய்வத்தின் போர்வையில், நல்ல பெயருடன் பொருளுடன் வாழ வழியிருப்பது தான் போலி சாமியார்களின் வருகைகளுக்கு முக்கியமான காரணம். மற்றும் கடவுள், கடவுள் என்று கூறிக்கொண்டு மனிதத்தன்மையே இல்லாதவர்கள் எத்தனையோ உள்ளனர், திருட்டு தனம், அரசாங்கத்தை ஏமாற்றுதல், கள்ளத்தனம் மற்றும் பல வகையில் கெட்ட மனம் இருக்கும் கடவுள் ஆதரவாளர்கள், பக்தர்கள்/பக்தைகளைப் பார்க்கும் போது இந்த கடவுள் என்ற அமைப்பின் சாராம்சம் கூட பொய்யாகிப்போகின்றது(அதை ஒர் அரசியலாக மாத்திரமே பார்க்கும் போது)
மனுவையும், வேதங்களையும் தெரிந்துள்ளார்களா, அவை உண்மையாக என்ன கூறுகின்றன என்று அறிந்துள்ளார்களா? மதத்தின் உண்மையான தோற்றமோ, கூறுகளோ தெரியுமா என்று பல கேள்விகள். கண் மூடித்தனமான பழக்கங்கள் மற்றும் அரைகுறையான புரிதல்களுடனான இந்த பக்தி முழுமையானதா? அப்படி படித்த பின்பும், தெரிந்து கொண்ட பின்பும் இவற்றை கடைபிடிப்பார்களா? கடைபிடிப்பதில் அர்த்தம் காண்பார்களா? என்றெல்லாம் யோசித்தாலும் எதெற்குமே விடையில்லை.
கடவுள் உதவியுடனான நீதிக்கதைகள், ஒழுக்க முறைகள், புனித பார்வைகள் மற்றும் கலைத்திறன் இவை மூலமாக மட்டும் தான் சந்ததிகளுக்கு நல்ல சமுதாயத்தை, வழிகாட்டுதலைக் கொடுக்க இயலுமா? இந்த காரணத்தினால் தான் கடவுள் மறுப்பாளர்கள் கூட வீட்டில் கடவுள் கும்பிடுவதை தடுப்பதில்லையோ என்று பல கேள்விகள். இது ஒரு ஆழமான கட்டுரை இல்லையென்றாலும் இந்த கேள்வி என்னளவில் நியாயமான ஒன்றாகத்தான் படுகின்றது. புனிதம், கலை மற்றும் பண்பாடு தெய்வத்தை மட்டுமே சார்ந்த ஒன்றில்லையென்றால் வேரு எதைச் சார்ந்ததாக இருக்கலாம்?
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக